தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சியோல்,
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய அதிபர் வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.
ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்படி, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து 180 நாட்களுக்குள், அதிபரை பதவிநீக்கம் செய்வதா? அல்லது அவருக்கான அதிகாரத்தை திரும்ப வழங்குவதா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். ஒருவேளை அதிபர் பதவிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.