உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது ஐ.நா. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டது. இதை ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-11-16 00:00 GMT

நியூயார்க்.

உலக மக்கள் தொகை நேற்று 800 கோடியைக் கடந்து விட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.நா. மக்கள் தொகை நிதியம் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அந்தப் பதிவில், " 800 கோடி நம்பிக்கை. 800 கோடி கனவு. 800 கோடி வாய்ப்புகள். நமது பூமி இப்போது 800 கோடி பேருக்கு வீடாகி இருக்கிறது. நாம் 800 கோடி மக்களுடன் வலிமையாகிற தருணத்தில், 800 கோடி பேர் செழிக்கும் வகையில், நாம் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான உலகை கட்டமைப்போம்" என கூறப்பட்டுள்ளது.

இதையொட்டிய சுவாரசிய தகவல்கள்:-

* கடைசி 12 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 100 கோடி அதிகரித்து இருக்கிறது.

* சீனாவின் மக்கள் தொகை தற்போது 142.6 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடி. இந்தியா அடுத்த ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும்.

* 2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166.8 கோடியாக இருக்கும். அந்த நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 131.7 கோடியாக குறைந்து விடும். இது கணிப்புத்தான்.

* உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதை குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறி ஐ.நா. பெருமிதம் அடைந்துள்ளது. இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், " 1,800-ம் ஆண்டு வரை மக்கள் தொகை 100 கோடிக்கும் குறைவாக இருந்தது, மேலும் 100 முதல் 200 கோடியாக வளர 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது" என குறிப்பிட்டுள்ளது.

* உலக மக்கள் தொகை 2080-களில் 1040 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதே அளவு தொடர்ந்து 2100-ம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

* உலக மக்கள் தொகையில் இன்னும் 100 கோடி அதிகரித்து 900 கோடியை கடப்பதற்கு இன்னும் 14.5 ஆண்டுகள் (2037) ஆகலாம்.

* இப்போதிலிருந்து 2050-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 65 வயதுக்கு கீழானோர் எண்ணிக்கை முற்றிலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகரிக்கும். 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மக்கள் தொகை உயர் வருமானம் மற்றும், உயர்நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மட்டுமே அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்