ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்வு

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது.

Update: 2023-06-16 09:55 GMT

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட மசோத ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தை ஜப்பானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. இந்த மசோதாவின் மூலம் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இங்கிலாந்தில் 16-ஆகவும், பிரான்சில் 15-ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனாவில் 14-ஆகவும் உள்ளது. ஜப்பானில் 1907-ம் ஆண்டில் இருந்தே 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர். இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில், தற்போது இந்த வயது வரம்பை 16-ஆக ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்