தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

தாய்லாந்து பிரதமர் தேர்தல் இன்று மாலை நிறைவு பெற்றதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, இரவில் முடிவு அறிவிக்கப்பட கூடும்.

Update: 2023-05-14 14:29 GMT

பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் மூவ் பார்வர்டு என்ற கட்சியானது, தொகுதி வாரியாக மற்றும் கட்சி வாரியாக என இரண்டின் அடிப்படையிலும் முன்னணியில் உள்ளது. இதனை தொடர்ந்து, பியு தாய் கட்சி மற்றும் பும்ஜெய்தாய் கட்சி ஆகியன உள்ளன.

இன்றிரவு 11 மணியளவில் இதன் முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பாங்காக் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

அந்நாட்டின் இளைஞர்கள் கடந்த 2020-ம் ஆண்டு பெரிய அளவில் ஜனநாயக ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2014-ம் ஆண்டு ராணுவ சதியால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்ட பின் 2-வது முறையாகவும் இளைஞர்களின் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இதில், முன்னாள் ராணுவ தலைவர் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட பிரயுத் சான்-ஓ-சா என்பவரை வீழ்த்தும்படி வாக்காளர்களிடம் இளைஞர்கள் கேட்டு கொண்டனர்.

இந்த தேர்தலில், 2006-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தில் இருந்து எறியப்பட்ட தக்சின் ஷினவத்ராவின் மகளான பீதாங்தரன் ஷினவத்ரா (வயது 36) பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, தொழிலதிபர் ஷரெத்தா தவிசின் மற்றும் முன்னாள் நீதி மந்திரி சாய்காசிம் நிதிஸ்ரீ ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவரது தந்தை, ஆட்சியில் இருந்து 2006-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டது போன்றே, 2014-ம் ஆண்டில் அவரது உறவினரான யிங்லக், சர்ச்சைக்குரிய கோர்ட்டு உத்தரவின்படி வெளியேற்றப்பட்டதும், ஆட்சியை சான்-ஓ-சா கைப்பற்றி கொண்டார்.

அதனால், அவரை பழிவாங்கும் வகையில் இந்த தேர்தலில் ஷினவத்ரா போட்டியிடுகிறார் என கூறப்படுகிறது. இதனால், 9 ஆண்டுகளுக்கு பின் ராணுவ ஆட்சி அல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்