கொரிய தீபகற்பத்தில் பதற்றம்; அமெரிக்காவே காரணம்: ஐ.நா.வில் ரஷியா, சீனா குற்றச்சாட்டு

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட அமெரிக்காவே காரணம் என்று ஐ.நா. சபையில் ரஷியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

Update: 2022-06-09 05:23 GMT



ஐ.நா. சபை,



ஆசிய நாடான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் இருந்து வருகிறார். அவர், கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் அந்த நாடு தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்பும் நேரில் சந்தித்து பேசினர். எனினும் இருநாட்டு தலைவர்கள் இடையே அடுத்தடுத்து நடந்த 2 பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால்தான் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியும் என அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த வடகொரியா பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது.

எனினும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை மட்டுமே வடகொரியா சோதித்து வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 24ந்தேதி நீண்ட தூரம் செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன்கொண்ட ஹவாசோங் 17 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா.விடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இதற்காக கடந்த மாதம் வீட்டோ தீர்மானம் ஒன்று அமெரிக்கா சார்பில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில், வடகொரியா மீது விதிக்கப்பட கூடிய புதிய பொருளாதார தடைகள் பற்றி சீனா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி ஐ.நா. அமைப்பு கேட்டிருந்தது. இதற்கான கூட்டத்தில், இரு நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அதில் ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறும்போது, பியாங்யாங் மீது வாஷிங்டன் மேற்கொண்டுள்ள அணுகுமுறையை சாடி பேசினார். கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, அது இன்றளவில் வளர்ந்து காணப்படும் நிலைக்கு, அமெரிக்காவின் திடீர் திடீரென மாற்றப்படும் கொள்கைகளே காரணம் என கூறினார். அந்த கூட்டத்தில், வடகொரியாவுக்கு எதிரான தடைகளை நீக்கும்படியும் அவர் கேட்டு கொண்டார்.

இதேபோன்று, ஐ.நா.வுக்கான மாஸ்கோ துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா பேசும்போது, தடைகள் நீக்கப்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

வடகொரியாவுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவி அதிக அளவில் தேவையாயிருக்கிறது. இந்த பதற்றங்களுக்கு காரணம் வடகொரியா என மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சுமத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அன்னா கூறியுள்ளார்.

ஆனால், அமெரிக்க துணை தூதர் ஜெப்ரி டிலாரன்டிஸ் இந்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியதுடன், நடப்பு தடைகள் மற்றும் ஒப்புதல்கள், வடகொரியாவின் செயல்களுக்கு நேரிடையான அல்லது கூடுதல் பதிலடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்