வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. ஜனாதிபதி ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் என்றும் அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பைடன் உறுதி அளித்தார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சுமூகமாக நடக்க வேண்டுமோ, அவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி மற்றும் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தை குறிக்கும். எனினும், கடந்த 2020ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்ததும், அவர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.