பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளனர்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
வெளிநாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்காத வரை நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
காபுல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.
எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் அங்கு அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அதே போல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட்டது.
இதே போல் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலீபான்கள் பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டில் அங்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மக்கள் தலீபான்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆப்கானிஸ்தான் ஆராய்ச்சியாளர் ஃபெரெஷ்டா அப்பாஸி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகளில் வெளிநாட்டு அரசாங்கங்கள் தீவிரமாக அழுத்தம் கொடுக்காத வரை ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.