கடல் கேபிள்களை பாதுகாக்க கடற்படையை அனுப்ப தயார்.. தைவான் ராணுவ மந்திரி தகவல்
ஆயுதப்படைகள் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து கடல் கேபிள் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்க உதவும் என்று தைவான் மந்திரி கூறினார்.;
தைபே:
தைவானை உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் இணைய கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொடர்பு கேபிளை சீனாவுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தைவான் அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடலுக்கடியில் தகவல் தொடர்பு கேபிள்களுக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டால் பதிலடி கொடுப்பதற்கு, கடலோர காவல்படைக்கு உதவ தேவைப்பட்டால் தைவான் தனது கடற்படையை அனுப்பும் என்று ராணுவ மந்திரி வெலிங்டன் கூ இன்று தெரிவித்தார். ஆயுதப்படைகள் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து கடல் கேபிள் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
ஹாங்காங் நிறுவனத்திற்கு சொந்தமான ஆனால் கேமரூன் மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு கப்பல் இந்த மாத தொடக்கத்தில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கேபிளை சேதப்படுத்தியதாக தைவான் கூறியது. இருப்பினும் அந்த கப்பலின் நோக்கம் என்ன? என்பதை சரிபார்க்க முடியவில்லை என்றும் மோசமான வானிலை காரணமாக கப்பலில் ஏற முடியவில்லை என்றும் தைவான் கூறுகிறது.
இந்த குற்றச்சாட்டை கப்பலின் உரிமையாளர் மறுத்துள்ளார். மேலும் உண்மை நிலவரம் தெரியும் முன்பே தைவான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சீன அரசாங்கம் கூறியுள்ளது.