விமானம் எரிகிறது...! சூடான் உள்நாட்டுப் போரில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2023-04-18 04:53 GMT

கார்டூம்

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை.

தன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை தலைநகர் கார்டூம் உட்பட பரந்த பகுதியில் சுமார் 200 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் பரவியதால் 1800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் சில டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

சூடானின் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தில் உக்ரைன் விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் செயற்கைக்கோள் படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ராணுவ அதிரடி படைகள் ஏற்கனவே ஜனாதிபதி இல்லம், இராணுவத் தளபதியின் இல்லம், நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு அலுவலகங்கள் மற்றும் கார்ட்டூமின் விமான நிலையத்தை கையகப்படுத்திவிட்டதாக கூறுகிறது. ஆனால், சூடான் ராணுவம் அதை ஏற்க மறுத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்