ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-01-30 08:48 GMT

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான 'மேட்ரிட்' நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சராக நான் இருக்கிறேன்.

எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.

கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும், இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.

மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. 130-க்கும் மேற்பட்ட "பார்ச்சூன் 500" நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள். தோல் பொருட்கள். தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.

இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு. உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம். மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து தொழில்துறை அமைச்சர் அவர்களும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்