அமெரிக்கா : குத்துசண்டை போட்டியிடையே துப்பாக்கிசூடு என வதந்தி - அலறியடித்து ஓடிய ரசிகர்கள்
ஏற்கனவே டெக்சாஸ் துப்பாக்கிசூடு சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆரம்பப்பள்ளியில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நியூயார்க் மாகாணத்தில் குத்து சண்டை போட்டியின் போது துப்பாக்கிசூடு நடப்பதாக பரவிய வதந்தியை அடுத்து அங்கு இருந்த ரசிகர்கள் அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்கில் உள்ள ஒரு உள்விளையாட்டு அரங்கில் குத்துசண்டை போட்டியின் போது பலத்த சத்தத்தை கேட்ட சில ரசிகர்கள் துப்பாக்கிசூடு நடைபெறுவதாக கத்தியுள்ளனர். இதைக் கேட்ட அங்கு இருந்த அனைவரும் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய நியூயார்க் போலீசார், " அரங்கத்தில் நிலவிய சத்தத்தை கேட்ட சிலர் அதை துப்பாக்கிசூடு என நினைத்து கூச்சலிட்டுள்ளனர். இதை கேட்டு அனைவரும் ஓட ஆரம்பத்தினர். அவ்வாறு எதுவும் நடைபெற வில்லை. அந்த செய்தி வெறும் வதந்தி " என தெரிவித்தனர்.