பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் குண்டுவெடிப்பு.. பயங்கரவாத தாக்குதலா..? விசாரணை தீவிரம்

ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தலைவர் கூறி உள்ளார்.

Update: 2024-11-15 05:57 GMT

பிரேசிலியா,

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் காயம் ஏற்படவில்லை. ஆனால், தாக்குதல் நடத்திய நபர் உயிரிழந்தார். அந்த நபர் கார் குண்டை வெடிக்கச் செய்தபோது பலியானதாக தெரிகிறது. அவர் மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, நீதிபதிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடந்த சுப்ரீம் கோர்ட்டு அருகே நாடாளுமன்றம், அதிபர் மாளிகை என பல்வேறு முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. எனவே பாதுகாப்பு கருதி அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரேசிலில் வருகிற 18-ந்தேதி ஜி-20 மாநாடு தொடங்க உள்ளது. அந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி காவல்துறை இயக்குனர் ஆண்ட்ரே பாசஸ் ரோட்ரிக்ஸ் கூறியதாவது:

தாக்குதலில் இறந்தவர் பெயர் பிரான்சிஸ்கோ வாண்டர்லே லூயிஸ் (வயயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் நீண்ட காலமாக திட்டமிட்டு தனியாக இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் இதன் பின்னணியில் சதி இருக்கலாம்.

இந்த தாக்குதல் ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இருக்கலாம். கடந்த ஆண்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு எதிரான கிளர்ச்சியுடன் இந்த தாக்குதலுக்கு தொடர்பு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாண்டர்லே லூயிஸ், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் தீவிர வலதுசாரி லிபரல் கட்சியின் உறுப்பினர். லூலா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு போல்சனாரோ கண்டனம் தெரிவித்தார். இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்