இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கூட்டணி வென்றுள்ளது.

Update: 2024-11-15 01:25 GMT

Photo Credit: AP

கொழும்பு,

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகா உத்தரவிட்டார்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தேர்தலில் 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே அதிபர் திசநாயகேவின் கட்சி முன்னிலை பெற்றது. தற்போது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அதிபர் திசநாயகேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் தனிப் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவையென்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 123 இடங்களை கடந்துள்ளது.இதன்மூலம் வலுவான நாடாளுமன்றத்தை அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைக்கவுள்ளது

காலை 10.30 மணி நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி 123 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.இலங்கை தமிழ் அரசு கட்சி - 3 புதிய ஜனநாயக முன்னணி - 3 இலங்கை பொதுஜன கட்சி - 2ஐக்கிய தேசிய கட்சி - 1ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 1இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய மக்கள் சக்தி 61.7 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.72 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்