இந்தியாவால் தேடப்பட்ட ஷாகித் லத்தீப் பாகிஸ்தானில் சுட்டு கொலை; பயங்கரவாத பின்னணி விவரம்...

இந்தியாவால் அதிகம் தேடப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவராக ஷாகித் லத்தீப் அறிவிக்கப்பட்டார்.

Update: 2023-10-11 16:28 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தில் 2016-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் முக்கிய நபராக இருந்தவர் லத்தீப்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் மவுலவியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சியால்கோட் நகரில் மர்ம நபர்களால் மசூதி ஒன்றின் உள்ளே வைத்து இன்று அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் மற்றொரு ஜெய்ஷ் பயங்கரவாதியும் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி விட்டனர். இது ஒரு பயங்கரவாத சம்பவம் என போலீசார் கூறியுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய லத்தீப், பதன்கோட்டில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை வழிநடத்தியவர். 1994-ம் ஆண்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

பின்பு விசாரணை நிறைவில் சிறையில் அடைக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு தண்டனை முடிந்து வாகா எல்லை வழியே பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். 41 வயதுடைய லத்தீப், இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதி என 2010-ம் ஆண்டு பட்டியலிடப்பட்டவர் ஆவார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் கராச்சி நகரில் வைத்து முப்தி கைசர் பரூக் மற்றும் லஷ்கர் அமைப்பை சேர்ந்த ஜியாவுர் ரகுமான் கொல்லப்பட்டனர். ராவல்பிண்டி நகரில் கடந்த பிப்ரவரியில், ஹிஜ்புல் அமைப்பின் தளபதி பஷீர் அகமது கொல்லப்பட்டார். லத்தீப்பை சுட்டு கொன்று விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்