பனாமா நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து வித்தியாசமான முறையில் போராட்டம்!

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் பனாமா நாட்டிலும் வெடித்துள்ளது.

Update: 2022-07-12 12:07 GMT

பனாமா சிட்டி,

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் பனாமா நாட்டிலும் வெடித்துள்ளது. ஆனால் அந்த போராட்டத்தை எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களே கையிலெடுத்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை, உணவுப் பொருட்கள் விலை ஆகியவற்றை கட்டுப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர். டிரம்ஸ்களை இசைத்து, ஆடல் பாடலுடன் போராட்டம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

உக்ரைன்-ரஷியா இடையிலான போரின் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை தொடங்கி பாகிஸ்தான், நேபாளம், பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

அந்த வரிசையில் எரிபொருள் மற்றும் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பனாமா நாட்டில் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் வித்தியாசமாக, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களே போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு கொடுத்துள்ளனர். நிலைமை கைமீறிப் போய் விடாமல் இருக்க பனாமா அரசு போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

மேலும், தொடர் போராட்டத்தை தொடர்ந்து பனாமா அதிபர் லாரன்டினோ கார்டிசோ பெட்ரோல் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்