மேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் போலீசார் 3 பேர் பலி

மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-01 16:22 GMT

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையின் இடானா - தர்கியுமியா சந்திப்பு அருகே இன்று மாலை காரில் இஸ்ரேல் போலீசார் 3 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை குறிவைத்து பாலஸ்தீன ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் இஸ்ரேலிய போலீசார் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தப்பியோடிய பயங்கரவாதியை தீவிரமாக தேடினர். பின்னர், ஹிப்ரோன் பகுதியில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதியை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்