பாகிஸ்தான் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

ஆளுங்கட்சி மீது பல்வேறு அதிருப்தி இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பல்வேறு தொகுதிகளை அது கைப்பற்றி உள்ளது.

Update: 2024-04-22 19:57 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து கூட்டணி கட்சி ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

அதன்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் மோசடி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுதொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் பல வழக்குகளும் தொடரப்பட்டு அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 21 இடங்கள் அங்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பலுசிஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

எனினும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவ்வாறு பல்வேறு குழப்பத்துக்கு மத்தியில் அங்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இணையதளம் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சி மீது பல்வேறு அதிருப்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் பல்வேறு தொகுதிகளை அது கைப்பற்றியது. அதன்படி 2 எம்.பி. தொகுதிகள் உள்பட 12 இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்