பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் நியமனம்
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.;
லாகூர்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், அரசுக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரைஸ் அகமது இணைந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககரை நியமித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை அன்வர் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலி பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.