பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பாதுகாப்பு பணியாளர் கைது!
ஒரு கர்ப்பிணி பெண்ணை பாதுகாவலர் ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கராச்சி,
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஒரு கர்ப்பிணி பெண்ணை பாதுகாவலர் ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சனா என்பவர், கராச்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே குடியிருப்பில் பாதுகாவலராக பணியாற்றி வரும் நபர் கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அதில் அந்த பெண் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அரசின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. சிந்து மாகாண முதல்-மந்திரி இச்சம்பவம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட பாதுகாவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பாதுகாவலரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். சம்பவத்தன்று, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, அந்த பெண் தன் மகனிடம் தனக்கு உணவு கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அவருடைய மகன் உணவு எடுத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அவரை உள்ளே விட மறுத்த அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை வெளியேறுமாறு கூறினர்.
இதனை அடுத்து அந்த பெண் கீழே வந்து பாதுகாவலர்களுடன் முறையிட்டுள்ளார். அதில் அந்த பாதுகாவலர்கள் அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கும் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். பின் காலால் எட்டி உதைத்துள்ளார்.
அந்த பெண் ஆறுமாத கர்ப்பிணியாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அவர் எட்டி உதைத்ததில் அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வண்ணம் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், பாகிஸ்தானில் 91 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர், 157 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர். மேலும் 112 பெண்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் ஆளாகியுள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.