அமெரிக்க 'டிரோன்'களுக்கு அனுமதி: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

அமெரிக்க ‘டிரோன்’களை அனுமதிப்பதாக கூறும் ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-08-29 20:10 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஜூலை மாதம்31-ந்தேதி அமெரிக்கா நடத்திய 'டிரோன்' தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இந்த சூழலில் இப்போதும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் அடிக்கடி டிரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலீபான் அரசின் ராணுவ மந்திரி முகமது யாகூப், பாகிஸ்தான் வழியாக அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதாகவும், அமெரிக்க டிரோன்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது கூறுகையில், "எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், ஆப்கானிஸ்தான் மந்திரி முன்வைக்கும் இத்தகைய யூக குற்றச்சாட்டுகள் மிகவும் வருந்தத்தக்கவை. மேலும் அவை பொறுப்பான தூதரக நடத்தை விதிமுறைகளை மீறுகின்றன" என கூறினார்.

தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்