விண்வெளிக்கு சென்ற 100-வது பெண் மீது பாலியல் ரீதியான விமர்சனங்கள் - பதிலடி கொடுத்த வீராங்கனை

விண்வெளிக்கு சென்ற 100-வது பெண் மீது இணையவாசிகள் பலர் பாலியல் ரீதியான ஆபாசமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.;

Update: 2024-11-28 16:19 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி சுற்றுலா நிறுவனமான 'புளூ ஆரிஜின்'(Blue Origin) மூலம், கடந்த 22-ந்தேதி 6 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குழுவில் விண்வெளி பொறியியல் பட்டதாரியும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான எமிலி காலண்ட்ரெலி இடம்பெற்றிருந்தார். 37 வயதான எமிலி, விண்வெளிக்கு சென்ற 100-வது பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த குழுவினர் விண்வெளிக்கு சென்று சேர்ந்த வீடியோவை 'புளூ ஆரிஜின்' நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோவில், முதல் முறையாக விண்வெளியில் இருந்து பூமியை பார்த்த எமிலி, தனது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். பூமியை விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, தனது குழந்தைகளை முதல் முறையாக கையில் ஏந்திய அதே உணர்வு தனக்கு மீண்டும் ஏற்பட்டதாக எமிலி கூறியிருந்தார்.

ஆனால் இந்த வீடியோவில் இணையவாசிகள் பலர் மோசமான, பாலியல் ரீதியான கருத்துகளை பதிவிட்டிருந்தனர். சிலர் எமிலியின் பேச்சு மற்றும் அவரது பாவனைகளை பற்றி ஆபாசமாக விமர்சனம் செய்தனர். மேலும் ஒருவர், "விண்வெளிக்கு சென்றவர்களில் மிகவும் கவர்ச்சியான பெண் நீங்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?" என்று பதிவிட்டிருந்தார். இது போன்ற பல கொச்சையான, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், 'புளூ ஆரிஜின்' நிறுவனம் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய பிறகு, தனது வீடியோவுக்கு வந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு எமிலி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது கனவை நனவாக்கிய தருணத்தை அனுபவித்துவிட்டு நான் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இவை அனைத்தும் நடந்துள்ளன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில், அழுது கொண்டிருக்கிறேன். நிச்சயமாக, இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் இணையத்தில் உலவும் சிறிய புத்தி கொண்ட மனிதர்களுக்கு நான் அதிக நேரம் கொடுக்க மாட்டேன். தன்னிடம் இல்லாத மகிழ்ச்சியை பிறரிடம் காணும்போது அதை புரிந்து கொள்ள முடியாத மனிதர்களை பார்த்து நான் கவலைப்படுகிறேன். என்னிடம் இருக்கும் மகிழ்ச்சி என் இதயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்திய விதத்திற்காக நான் மன்னிப்பு கேட்கவோ, தயக்கம் கொள்ளவோ மாட்டேன். அது என்னுடைய உணர்வு, அதை உங்களிடம் மீண்டும் நான் பகிர்வேன்.

நான் விமானத்தில் இருந்து தரையிறங்கியபோது, ஒரு பெண் ஊழியர் என்னிடம் வந்து, 'உங்களிடம் இருக்கும் பிரகாசத்தை மற்றவர்கள் குறைத்துவிட அனுமதிக்காதீர்கள்' என்று கூறினார். அந்த நேரத்தில் அவருடனும், அனைத்து பெண்களுடனும் நான் ஒரு தோழமையை உணர்ந்தேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்