பாகிஸ்தான்: முதல் காலாண்டில் 127 காவல் அதிகாரிகள் தாக்குதலில் உயிரிழப்பு

பாகிஸ்தான் முழுவதும் முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் 127 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2023-04-05 05:43 GMT

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டில் கைபர்-பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து உள்ளது.

நாடு முழுவதும் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில், முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் மொத்தம் 127 காவல் அதிகாரிகள் வரை உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

தெஹ்ரீக்-ஐ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தோல்வி அடைந்த பின்பு, அந்த குழு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த தடை செய்யப்பட்ட குழுவுடன் சேர்ந்து கொண்டு, பலூசிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாத குழுக்களின் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து உள்ளன என டான் பத்திரிகை தெரிவிக்கின்றது.

கடந்த 2017-ம் ஆண்டில் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2019-ம் ஆண்டில் 38 ஆகவும், 2020-ம் ஆண்டில் 28 ஆகவும், 2021-ம் ஆண்டில் 59 ஆகவும் இருந்தது. இது 2022-ம் ஆண்டில் 120 ஆக அதிகரித்து இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் நடந்த தாக்குதலில் 127 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. இது முந்தின ஆண்டை விட மிக அதிகம் என பதிவாகி உள்ளது.

இந்த 127 பேரில் கடந்த ஜனவரியில் 116 பேரும், பிப்ரவரியில் 2 பேரும், கடந்த மார்ச் மாதத்தில் 9 பேரும் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இவர்களில் 4 துணை போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் சில இளநிலை அதிகாரிகள் உள்ளிட்டோரும் தாக்குதலின்போது, நடப்பு முதல் காலாண்டில் உயிரிழந்து உள்ளவர்களில் அடங்குவர்.

இவற்றில் பெஷாவர் நகரில் கடந்த ஜனவரியில் மசூதி ஒன்றில் போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட 400 பேர் தொழுகையில் ஈடுபட்டு இருந்த தருணத்தில் நடந்த தாக்குதல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இதில், 100-க்கும் கூடுதலானோர் உயிரிழந்து இருந்தனர் என ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்