"பொருளாதாரமே இல்லாத போது பொருளாதார சீர்திருத்தம் செய்வதில் பயனில்லை" - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே
தற்போதைய பொருளாதாரம் சீர்திருத்தம் செய்வதற்கு உகந்தது அல்ல என்று என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.;
கொழும்பு,
1948-ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், தற்போது இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம், மின் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற பல்வேறு சவால்களை அந்நாட்டு அரசு சமாளித்து வருகிறது.
இதனிடையே விலையேற்றம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக பல மாதங்களாக நடைபெற்ற போராட்டங்களால் ஜூலை மாதம் ஜனாதிபதி ராஜபக்சே பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், காலாவதியான பொருளாதார அமைப்புகள் மூலம் பொருளாதாரத்தை சரி செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.
மேலும் பொருளாதாரமே இல்லாத போது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்வதில் பயனில்லை என்று தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதாரம் சீர்திருத்தம் செய்வதற்கு உகந்தது அல்ல என்றும் ஒரு புதிய பொருளாதாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும் என்று கூறினார்.