மும்பை தாக்குதல்; இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம்

மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட நடவடிக்கை கோரி இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-11-26 01:05 GMT



கொழும்பு,


இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே புதிய ஜனநாயக கட்சி முன்னணி என்ற கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின்போது, பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும். பாகிஸ்தானிய பயங்கரவாதம் தெற்காசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடந்தது.

இதன்பின்னர், பாகிஸ்தான் தூதரக நிர்வாக அதிகாரியிடம் புதிய ஜனநாயக கட்சி முன்னணி கட்சியின் பொது செயலாளர், பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்