அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.

Update: 2023-08-13 21:11 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீவுக்கூட்டங்களின் 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ மளமளவென நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.

தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஏராளமானோர் அங்கு வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் சூழல் உருவானது. மேலும் சுமார் 30 செல்போன் கோபுரங்கள் எரிந்ததால் அங்கு தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன.

மீட்பு பணியில் ராணுவத்தினர்

இதற்கிடையே அங்கு சுற்றுலா சென்றிருந்த பலர் செய்வதறியாது திகைத்து விமான நிலையம் சென்றனர். ஆனால் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்திலேயே அவர்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் சிலர் காட்டுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர்.

ஹவாய் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவாக இது கருதப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீட்பு படையினருக்கு உதவ உடனடியாக அங்கு ராணுவத்தை அனுப்பினார். அவர்கள் தீ விபத்தில் சிக்கிய சுமார் 12 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

பல கோடி மதிப்பிலான சேதம்

இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். எனினும் இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்