ஆப்கானிஸ்தான்: சீக்கிய வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; வெளியேற முடியாமல் பக்தர்கள் தவிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வானில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-06-18 05:22 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வான் இருக்கும் பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட காபூலில் உள்ள குருத்வாரா கார்டே பர்வானில், பல சீக்கிய பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கும் தலீபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

தாக்குதல் நடந்தபோது 25-30 ஆப்கானிஸ்தான் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குருத்வாராவில் காலை பிரார்த்தனைக்காக இருந்தனர். மேலும், சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வானின் பாதுகாவலர் அஹ்மத் என்பவர் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 3 பேர் குருத்வாராவில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இன்னும் 7-8 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கிச் சூடு இன்னும் தொடர்கிறது என்று பா.ஜ.க தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் குருத்வாராவில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சிக்கியவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்