உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகள் குறித்து ஆசியான் மாநாட்டில் மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை

ஆசியான்-இந்தியா உறவுகளின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

Update: 2022-11-12 15:24 GMT

புனோம் பென்(கம்போடியா),

ஆசியான் என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.

அதில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகள் உள்ளன.இந்த ஆண்டு ஆசியான்-இந்தியா உறவுகளின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது மற்றும் ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் இன்று நடைபெற்ற ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை சந்தித்தார். இந்த சந்திப்பில், உக்ரைன் போர், அணு ஆயுத அச்சுறுத்தல் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.

இது குறித்து மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியதாவது, 'எங்களின் கலந்துரையாடலில் உக்ரைன் மோதல், உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் அணுசக்தி பிரச்சினைகள், உணவு தானிய முயற்சிகள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் விவாதித்தோம்' என்று தெரிவித்தார்.

இது குறித்து உக்ரைன் மந்திரி டுவிட்டரில் கூறியதாவது, 'இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்' என்று தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்