கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-08-10 08:58 GMT

கொழும்பு,

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்.

அதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். கோத்தபயாவின் விசா காலம் வருகிற 11ந்தேதி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டும். கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூரிலேயே சிறிது காலம் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்