மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2024-10-14 08:05 GMT

காசா,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள தங்குமிடமாக மாறிய பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். காசாவில் ஆண்டுகாலப் போரினால் இடம்பெயர்ந்த பல பாலஸ்தீனியர்கள் இந்த பள்ளியில் அடைக்கலம் அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் நுசிராட்டில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கும், டெய்ர் அல் பலாவில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்