ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி சுட்டுக்கொலை
ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்,
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். காசா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் ஜவாத் அபு ஷமாலா. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறினார்.
காசா முனையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ’எல்லையில் ஓரளவு கட்டுப்பாட்டை மீட்டு கொண்டு வந்து உள்ளோம். எனினும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடக்கிறது’ என்று கூறியுள்ளது.
காசாவில் இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்
காசா முனையில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. 200க்கும் அதிகமான இடங்களில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுவப்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவுடனான எல்லைப்பகுதிகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம்
காசாவுடனான எல்லைப்பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காசா எல்லையோர பகுதிகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் - ஹமாஸ் எச்சரிக்கை
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக்கைதிகளை கொலை செய்வோம். மேலும், பிணைக்கைதிகளை கொலை செய்வதை டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்வோம் என்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் தாய்லாந்து நாட்டினர் 18 பேர் பலி
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாய்லாந்தை சேர்ந்த 11 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பலியானோர் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 700 பேர் உயிரிழந்தனர்.