லைவ்: 5ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்
இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் எரிசக்தித்துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், இஸ்ரேலின் செயல்பாடுகள் அநீதியின் வெளிப்பாடாக பாலஸ்தீனியர்களால் உணரப்படுகிறது என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள வீடியோவில்,
"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாப்படுத்த முடியாது. மக்களை காக்க, தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள தாக்குதலுக்கு பதிலடி தர இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும்.தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உதவுவோம்" என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
எனது சகோதரியும், அவரது கணவரும் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள் கண் முன் இந்த சம்பவம் நடைபெற்றதுள்ளதாக பாலிவுட் நடிகை மதுரா நாயக் வேதனையுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. போர் காரணமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியது பாலஸ்தீன அரசு. காசா நகரில் அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் காசா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உணவு, தண்ணீருக்கும் தட்டுப்பாட்டால் காசா நகரில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து 86.83 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது - இஸ்ரேல் ராணுவம்
லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் மின் வினியோகம் முழுவதும் தடைபடும் அபாயம்...!
காசா முனைக்கு மின் வினியோகம் செய்யும் நிறுவனங்களிடம் உள்ள எரிபொருள் வேகமாக குறைந்து வருவதால் மின் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் காசாவில் மின் வினியோகம் முழுவதும் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.