இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது
ஜெருசலேம்,
பயங்கரவாதம் பொது எதிரி - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மேக்ரான் கூறுகையில், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்கு பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும்’ என்றார்.
ஹமாஸ் தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினர் 12 பேர் பேர் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினர் கடந்த 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1405 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பலரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மாயமானவர்களில் சிலர் பிணைக்கைதிகளாக ஹமாஸ் வசம் இருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவை விட்டு வெளியேறி தெற்கு பகுதிக்கு செல்லுங்கள் - பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக காசா எல்லையில் படைகளை இஸ்ரேல் குவித்து வைத்துள்ளது.
இதனிடையே, வடக்கு காசாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்லும்படி பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. வடக்கு காசாவில் தொடர்ந்து முழு பலத்துடன் தாக்குதல் நடத்த உள்ளோம். ஆகையால், வடக்கு காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தெற்கு காசாவுக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
மார்க்கெட் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்:
காசாமுனையின் டீர் அல் பலஹா மாகாணம் நுசிரட் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாம் அருகே அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது.
18வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.