காசாவில் தாக்குதலை நிறுத்தவில்லை எனில்... இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

காசாவில் தாக்குதலை நிறுத்தவில்லை எனில் உலகில் உள்ள முஸ்லிம்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-10-17 14:16 GMT

டெஹ்ரான்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

பணய கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதலை நடத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஈரான் அதிபர் அயதுல்லா அலி காமினி அரசு தொலைக்காட்சியில் கூறும்போது, காசாவில் இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்ந்தால், உலகில் உள்ள முஸ்லிம்களை மற்றும் எதிர்ப்பு படைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறினார்.

காசாவில் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி தொடங்கியதில் இருந்து, ஈரானில் ஆட்சி செய்து வருபவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

காசாவை கட்டுப்படுத்த கூடிய இஸ்லாமிய குழுவான ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிப்பதிலோ, நிதியுதவி மற்றும் ஆயுத உதவி அளிப்பதிலோ ஈரான் ரகசியம் எதுவும் காக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,300-க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், 2,800-க்கு கூடுதலான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ வினியோகம் ஆகியவற்றையும் இஸ்ரேல் ஒட்டு மொத்த அளவில் தடை செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்