ஈரான் ஹெலிகாப்டர் விபத்து; தளவாட சிக்கல்களால் விசாரணையில் உதவ முடியவில்லை - அமெரிக்கா

ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையில் தளவாட சிக்கல்கள் காரணமாக ஈரானுக்கு உதவி செய்ய முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Update: 2024-05-21 16:00 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் நேற்று அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையில் உதவுமாறு அமெரிக்காவிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டதாகவும், தளவாட சிக்கல்கள் காரணமாக தற்போது உதவி செய்ய முடியவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"ஈரான் அரசு எங்களிடம் விசாரணைக்காக உதவி கோரியது. நாங்கள் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தோம். இது போன்ற ஒரு சூழலில், எந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் நாங்கள் உதவி செய்வோம். ஆனால் தளவாடங்களை கொண்டு செல்வது உள்ளிட்ட காரணங்களால் தற்போது எங்களால் உதவி செய்ய முடியவில்லை.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கிறோம். அதே சமயம், இப்ராகிம் ரெய்சியின் கடந்த காலம் மாறிவிடாது. ஒரு நீதிபதியாகவும், ஈரானின் அதிபராகவும் அவரது கைகளில் ரத்தம் படிந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் அடிப்படை அணுகுமுறை மாறப்போவது இல்லை. ஈரான் மக்களின் மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

ஈரான் அரசு தனது விமானத்தை பயங்கரவாதிகளுக்கு உபகரணங்கள் கொண்டு செல்ல பயன்படுத்தியது. எனவே, ஈரான் அரசாங்கத்தின் மீதான அமெரிக்காவின் தடைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். மேலும், மோசமான வானிலை நிலவியதாக கூறப்படும் இடத்தில் 45 ஆண்டுகள் பழமையான ஹெலிகாப்டரை பயன்படுத்திய முடிவிற்கு ஈரான் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்