இந்தியா அளித்து வரும் மனிதாபிமான உதவிகளை ஆய்வுசெய்ய இந்திய குழு ஆப்கானிஸ்தானுக்கு பயணம்

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

Update: 2022-06-02 11:13 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, காபூலுக்கு இந்திய அரசு பிரதிநிதிகள் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர்களை இந்திய குழு சந்திக்கவுள்ளது.

இந்த பயணத்தின் போது, இந்திய குழுவினர் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர். இந்த பயணத்தின் போது, இந்திய திட்டங்கள் செயல்படுத்தப்படும் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த குழு பார்வையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:-

20,000 மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மற்றும் குளிர்கால ஆடைகள் அடங்கிய பல மனிதாபிமான உதவிகளை இந்தியாவிலிருந்து ஏற்கெனவே அனுப்பியுள்ளோம்.

இந்த சரக்குகள் காபூலில் உள்ள இந்தியா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக உணவு திட்டம் உள்ளிட்ட ஐ.நா சிறப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், ஈரானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்குவதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்களை ஈரானுக்கு அளித்துள்ளோம்.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் மருத்துவ உதவி மற்றும் உணவு தானியங்களை அனுப்பும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்