இருளில் தவிக்கும் கிழக்கு உக்ரைன்! எரிவாயு, மின்சாரம், தண்ணீர் இன்றி பொதுமக்கள் சிரமம்
கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை.இதன் காரணமாக தண்ணீரை பல கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கீவ்,
உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீத உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதன் காரணமாக தண்ணீரை பல கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலால் நகரங்களுக்கு மின்சாரம், நீர் மற்றும் எரிவாயுவை வழங்குவது தடைபட்டுள்ளன.
அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் உடந்த நிலையில் உள்ள தண்ணீர் குழாய்களை சரிசெய்ய அனுப்பப்பட்ட பழுதுநீக்கும் குழுவினர் வெடிகுண்டு தாக்குதலின் நடுவில் மாட்டிகொள்ள வேண்டிய சூழலில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் சில கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பழுதுபார்க்கும் குழுக்கள், போர் நடைபெற்று வரும் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இது ஆபத்தானது. ஆகவே இக்கட்டான சூழல் நிலவுகிறது.
கிழக்கு உக்ரைனின் தொழில்துறை மையமாக திகழும் டான்பாஸின் டொனெட்ஸ்க் பகுதியில், போரின் போது கூட, அங்குள்ள மக்கள் இன்னும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பழுதுபார்க்கும் குழுவை சேர்ந்த நபர் ஒருவர் சற்றே ஆச்சரியத்துடன் தான் கண்ணால் கண்டதை கூறினார்.
இன்றைய நிலவரப்படி, நகரின் பாதி பகுதி தண்ணீரின்றி உள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மோட்டார்களை கொண்டு கிணறுகளில் இருந்து தண்ணீரை வெளியே பம்ப் செய்து கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. மறுபுறம், ரஷிய படைகளின் தீவிர தாக்குதலால், அணை வெடிவைத்து தகர்க்கப்பட்டதில், அதில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகி கால்வாய்கள் வற்றியுள்ளன.
இங்கு எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எதுவுமே இல்லை என்று அழுது புலம்புகின்றனர் கடும் சிரமத்தில் உள்ள கிழக்கு உக்ரைன்வாசிகள். அவர்கள் தெருக்களிலும், பொது இடங்களிலும் செங்கல் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு அடுப்பு மூட்டி உணவை தயாரித்து, நாட்களை கழித்து வரும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.