காசா: ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்... பைடன் சூசகம்

போர் நிறுத்த காலகட்டத்தில், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெறும்.

Update: 2024-02-27 07:08 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், வருகிற மார்ச் 10-ந்தேதி முதல் ரமலான் மாதம் தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் கூறும்போது, முஸ்லிம்களின் இந்த புனித மாதத்தின்போது, பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு முன்வரும் என்றால், போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வரும்.

இதற்காக அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் பணியை மேற்கொள்வார்கள் என கூறினார். நகைச்சுவை நடிகர் சேத் மேயருடனான பேட்டியின்போது பைடன் இதனை கூறினார்.

இதன்படி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பிடித்து வைத்துள்ள பணய கைதிகளில் சிலர் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு ஈடாக, பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன், 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படும். இந்த தற்காலிக போர் நிறுத்த காலகட்டத்தில், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெறும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்போது, இஸ்ரேல் போர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது. இதனால், அனைத்து பணய கைதிகளையும் இந்த காலத்தில் மீட்டு கொண்டு வருவதற்கு நமக்கு நேரம் கிடைக்க பெறும் என்று பைடன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்