உக்ரைன் தலைநகர் கீவ் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகரை குறிவைத்து அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2022-10-10 07:37 GMT

Image Courtesy: AFP

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 229-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதம் ஆகும். சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியாவிடமிருந்து உக்ரைன் மீட்டு வரும் நிலையில் இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன.

2014-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைனிடமிருந்து கிரிமியா தீபகற்பத்தை ரஷியா கைப்பற்றியது. போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷியாவையும் - கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தில் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கிரியாவுடன் ரஷியாவை இணைக்கும் அந்த பாலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், உக்ரைன் மீதான போருக்கு தலைமை தாங்க ஜெனரல் செர்ஜி சுரொவ்கின் என்ற ராணுவ தளபதியை ரஷியா நேற்று முன் தினம் நியமித்தது.

இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

தலைநகர் கீவ், தெர்னொபில், ஹெம்லின்ஸ்கி, ஜுயொடொமிய்ர், ரொய்வென்யுஸ்கி உள்பட பல நகரங்கள் மீது ரஷியா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல் தற்போதும் நீடித்து வருகிறது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்