ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து.. 32 பேர் பலி
சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தெஹ்ரான்:
ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களும் வெளியே கொண்டுவரப்பட்டன. இன்று பிற்பகல் நிலவரப்படி 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வெடிவிபத்தின்போது 70 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் என்றும், தரைமட்டத்திற்கு கீழே 700 மீட்டர் (2,300 அடி) ஆழத்தில் உள்ள சுரங்கங்களில் 18 பேர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன் வாயு கசிவால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் அடிக்கடி சுரங்க விபத்து ஏற்படுகிறது. சுரங்கப் பகுதிகளில் உள்ள தரமற்ற பாதுகாப்பு வசதிகள் மற்றும் போதிய அவசரகால சேவைகள் இல்லாதது ஆகியவை பெரும்பாலும் உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.