டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க்..?
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் எலான் மஸ்க் மனம் திறந்து பேசியுள்ளார்.
வாஷிங்டன்,
உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. சமீபத்தில், டுவிட்டர் 'லோகோ'வான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' என்ற நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிபிசிக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டுவிட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அதனை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்று உள்ளது. டுவிட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று கருதினாலும், கடந்த பல மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன். பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன். சரியான நபரைக் கண்டுபிடித்தால் அவரிடம் டுவிட்டர் நிறுவனத்தை விற்பேன் என்று அவர் கூறினார்.
இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.