காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? பீதியை கிளப்பும் வீடியோ

காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Update: 2023-10-10 10:57 GMT

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் முதலில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடங்கி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பில் உக்கிரமான பதிலடி கொடுக்கப்படுகிறது. காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றிய பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அத்துடன், காசா மீது தொடர்ந்து வான் தாக்குதலை நடத்துகிறது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நான்காவது நாளாக இன்றும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக கூறி பாலஸ்தீனர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நெருப்பு மழை பொழிவது போன்று தெரிகிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையில் காசாவில் பதிவு செய்யப்பட்டதா? சமீபத்திய வீடியோவா? என்பது குறித்த முழுமையான தகவல் இல்லை.

வெள்ளை பாஸ்பரஸ் என்பது விரைவில் தீப்பற்றி எரியக்கூடிய ரசாயனமாகும். இது காற்றில் வெளிப்படும் போது விரைவாகவும் பிரகாசமாகவும் எரிகிறது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ராணுவங்கள், எதிரிகளின் இலக்கை அழித்து சேதப்படுத்துவதற்கான நெருப்பு ஆயுதமாக வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துகின்றன. இந்த ரசாயனம் தீப்பற்றும்போது அதிக வெப்பத்தை (சுமார் 815 டிகிரி செல்சியஸ்), ஏற்படுத்துவதுடன் அடர்த்தியான வெள்ளை நிற புகையை வெளியிடுகிறது. பதற்றமான பகுதிகளில் எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்கான புகை மண்டலத்தை உருவாக்க இந்த ரசாயனத்தை ராணுவங்கள் பயன்படுத்துகின்றன.

வெள்ளை பாஸ்பரசை ஒருமுறை பற்ற வைத்துவிட்டால் அதை அணைப்பது மிகவும் கடினம். தீப்பற்றிய இந்த ரசாயனம் மனிதர்களின் தோல் மற்றும் ஆடை உட்பட பல பகுதிகளில் ஒட்டிக்கொண்டால் அவ்வளவுதான். திசு மற்றும் எலும்பில் ஆழமாக ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும்.

பொதுமக்கள் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வகை குண்டுகளை, சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்