முன்னாள் அதிபருடன் டீல் பேசினாரா இம்ரான் கான்? வெளியான ஆடியோவால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலியுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன் டீல் பேச இம்ரான் கான் விரும்பினார் என்ற தகவல் அடங்கிய ஆடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.
அதில், தனது அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன், முன்னாள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மாலிக் ரியாஸ் உசைன் என்பவர் தொலைபேசி வழியே பேசிய உரையாடல் வெளிவந்துள்ளது.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பு உரையாடல் நடந்துள்ளது என கூறப்பட்டு உள்ளது. ஆனால், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
32 வினாடிகள் ஓட கூடிய அந்த ஆடியோ பதிவில் பேசிய ரியாஸ், சர்தாரியுடன் இம்ரான் கான் சமரச பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என கூறுகிறார். ரியாஸ் தொடர்ந்து, இன்று எனக்கு இம்ரான் கான் அதிக அளவில் மெசேஜ்களை அனுப்பியுள்ளார் என கூறுகிறார்.
அதற்கு மறுமுனையில் இருந்து, தற்போது அது சாத்தியமற்றது என்ற குரல் கேட்கிறது. அதற்கு பதிலாக, அது சரி. உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரவே இதனை கூறினேன் என்ற ரியாசின் குரலும் ஒலிக்கிறது. இதனை டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
எனினும், இந்த ஆடியோ போலியானது என இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ. கட்சி தெரிவித்து உள்ளது. ஆனால், சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்கள் இது உண்மையானது என்றே தெரிய வருகிறது என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி பி.டி.ஐ. தலைவர்களில் ஒருவரான ஷபாஸ் கில் கூறும்போது, இம்ரான் கானுக்காக, வர்த்தக பிரமுகர் மற்றும் இம்ரான் கானுக்கு எதிரான அரசியல்வாதி ஆகிய இருவரிடையே உரையாடல் நடக்கிறது. எனினும், இந்த உரையாடலில் உண்மையெதுவும் இல்லை என கூறியுள்ளார்.