நடுவானில் மோதல்; பாட்டிலை கொண்டு அடிக்க பாய்ந்த விமான பெண் பயணி: பரபரப்பு வீடியோ

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பயணிகள் மோதலால் விமானம் அவசர தரையிறக்கம் செய்து, கிளம்பிய பின் மீண்டும் மோதி கொண்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-26 17:30 GMT

குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கெயின்ஸ் நகரில் இருந்து வடக்கு பிரதேசத்தில் உள்ள குரூட் எய்லாண்ட் நகர் நோக்கி விமானம் ஒன்று பறந்து சென்றபோது, நடுவானில் பயணிகள் சிலர் மோதி கொண்டனர். இதனால், சக பயணிகள் அச்சமடைந்தனர்.

இதில், பெண் பயணி ஒருவர் பாட்டில் ஒன்றை எடுத்து மற்றொருவர் மீது தாக்க சென்று உள்ளார். இந்த வீடியோவும் வெளியானது. இந்த சம்பவம் எதிரொலியாக, விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

குறிப்பிட்ட அந்த பெண் பயணி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் விமான பயணத்தில் இருந்து நீக்கப்பட்டு, கீழே இறக்கி விடப்பட்டார். விமான ஊழியர்களின் அளித்த பாதுகாப்பு விதிகளுக்கான அறிவுறுத்தல்களை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் அந்த பெண்ணை விட்டு, விட்டு பிற பயணிகளுடன் விமானம் மீண்டும் பறந்தது. ஆனால், அதே பயணிகள் மீண்டும் தங்களது சண்டையை தொடர்ந்து உள்ளனர். வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் முடிந்ததில், விமானத்தின் உள்ளே இருந்த ஜன்னல் பகுதி உடைந்தது.

இதனை தொடர்ந்து, விமானம் ஆலியாங்குலா பகுதியில் தரையிறங்கியது. பயணிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். உள்நோக்கத்துடன் பிறருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல், சொத்துகளுக்கு பாதிப்பு, ஒழுங்கற்ற நடத்தை, வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 23 வயது நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதே வயதுடைய மற்றொரு பெண் மீதும் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்பட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 22 வயது நபர் மீது போதை பொருள் விநியோகம், பதுக்கி வைத்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்