ராணுவ பயிற்சியை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும்: அமெரிக்கா உள்பட 3 நாடுகள் கூட்டறிக்கை

சீனாவின் போர் பயிற்சியில் ஜப்பானின் பொருளாதார மண்டல பகுதியில் 5 ஏவுகணைகள் விழுந்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-08 04:47 GMT

வாஷிங்டன்,

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி போர் விமானங்கள் சூழ தைவானுக்கு சென்றார். தைவான் அதிபரை சந்தித்து பேசிய பின்னர், அந்நாட்டின் ஜனநாயக பாதுகாப்புக்கு இரும்பு தூண் போன்று அமெரிக்கா துணை நிற்கும் என பெலோசி பேசினார்.

இது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதனால் மிரட்டும் விதமாக தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன ராணுவம் கடந்த 4-ந்தேதி போர்ப்பயிற்சியை தொடங்கியது.

சீனாவின் இந்த போர்ப்பயிற்சி தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் குற்றம் சாட்டியதோடு, போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சீனாவை வலியுறுத்தியது. அதே போல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் சீனா தனது போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தின.

ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத சீனா, ஏற்கனவே அறிவித்தபடியே நேற்று 4-வது நாளாக போர்ப்பயிற்சியை தொடர்ந்தது. இதனிடையே மஞ்சள் கடலின் தெற்கு பகுதியில் வருகிற 15-ந்தேதி வரை போர்ப்பயிற்சியை தொடர உள்ளதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, போர்ப்பயிற்சியின் மூலம் சீனா பதற்றம் அதிகரிக்க முயற்சித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனாவின் போர்ப்பயிற்சி ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல் எனவும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், 55-வது ஆசியன் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நாம்பென் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில், கலந்து கொண்ட பின்னர் அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன், ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு மந்திரி ஹயாஷி யோஷிமசா ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், ராணுவ போர் பயிற்சியை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. தைவான் ஜலசந்தி பகுதி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரதன்மை நீடிக்க செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் அந்நாடுகள் மீண்டும் உறுதியளித்து உள்ளன.

சீன மக்கள் குடியரசின் சமீபத்திய போர் பயிற்சி உள்ளிட்ட செயல்கள் சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரதன்மையை வெகுவாக பாதித்து உள்ளன. சீனாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை வீச்சில், 5 ஏவுகணைகள் ஜப்பானின் தனித்துவ பொருளாதார மண்டலங்கள் பகுதியில் சென்று விழுந்துள்ளன என ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.

இது அந்த பகுதியில் பதற்றம் மற்றும் ஸ்திரதன்மையற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், சீன மக்கள் குடியரசு உடனடியாக ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்க கூடிய வகையிலான ஒரே சீனா கொள்கை மற்றும் தைவானின் அடிப்படை நிலைகள் ஆகியவற்றில் 3 நாடுகளுக்கும் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்