அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய லாரியால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்புகள் மீது லாரி மோதிய பகுதியில் நாஜிக்களின் கொடி கண்டெடுக்கப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அமைந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு தடுப்புகள் மீது லாரி ஒன்று நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக ஓடி சென்று லாரியின் ஓட்டுநரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை வழி மற்றும் பாதசாரிகள் செல்லும் நடைபாதை ஆகியவற்றை அதிகாரிகள் மறித்து, மூடினர்.
இதன்பின்பு, பாதுகாப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெல்மி கூறியுள்ளார்.
இந்த விபத்தினால், உளவு துறை அதிகாரிகளுக்கோ அல்லது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் மற்றும் விபத்து ஏற்படுத்திய விதம் ஆகியவை பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.