இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு!
பென்னி மார்டண்ட்டிற்கு 100 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்காததால் அவர் பிரதமர் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால், கடந்த 20-ந்தேதி லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்த போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரியான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர். நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் (வயது 49) போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார்.
எனினும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை.
இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார். இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் பென்னி மார்டண்ட்டிற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்றே சொல்லப்பட்டது. இந்த நிலையில், பென்னி மார்டண்ட்டிற்கு 100 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்காததால் அவர் பிரதமர் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
இதனால், இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆக போட்டியின்றி தேர்வானார்.