உலக சாதனை... அண்டார்டிகாவின் பனி ஓடுபாதையில் தரையிறங்கிய போயிங் விமானம்

45 விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு என 12 டன் எடையுள்ள பொருட்களுடன் விமானம் சென்றது.

Update: 2023-11-18 06:34 GMT

பனியால் சூழப்பட்டுள்ள அண்டார்டிகா கண்டம் மனிதர்கள் வசிக்க முடியாத நிலப்பரப்பாகும். எனவே, ஆய்வுக்காக மட்டுமே இந்த பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்கள், தாவரங்களின் படிமங்கள் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்படுன்றன. இதை ஆய்வு செய்வதற்காக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் இங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்துதான் கொண்டு செல்ல வேண்டும். அவர்களை அங்கு அழைத்து செல்லவும் திரும்ப கொண்டு வரவும் பெரும்பாலும் ராணுவ விமானங்களையே பயன்படுத்துகிறார்கள். 

இந்நிலையில் பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி உலக சாதனை படைத்திருக்கிறது. நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை கடந்த 15ம் தேதி அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் விமானிகள் தரையிறக்கி சாதனை படைத்துள்ளனர்.

நார்வே நாட்டிலிருந்து நார்வே போலார் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் உள்பட 45 விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு என 12 டன் எடையுள்ள பொருட்களுடன் புறப்பட்ட இந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பியது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்டார்டிகாவில் தரையிறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கிய நீல பனி ஓடுபாதையானது கிட்டத்தட்ட 2 மைல் நீளம் (3கிமீ) மற்றும் 200 அடி அகலம் கொண்டது. இது வழக்கமான ரன்வே போன்று காணப்பட்டாலும், பனிக்கட்டி என்பதால் விமானத்தை தரையிறக்குவது சவாலான பணி. கட்டுப்பாட்டை இழந்தால் சறுக்கிக்கொண்டு பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகிவிடும். இந்த சவாலான சூழ்நிலைக்கு மத்தியில், பத்திரமாக விமானத்தை தரையிறக்கியிருக்கிறார்கள்.

அண்டார்டிகாவில் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (235 கிமீ) தொலைவில் உள்ள குயின் மவுட் லேண்டில் உள்ள ஜூடுல்செசன் என்ற இடத்தில் நார்வே போலார் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்