டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் கட்டணம்..!! - எலான் மஸ்க் அதிரடி

டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-11-01 18:42 GMT

கோப்புப்படம்

சான்பிரான்சிஸ்கோ,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் அதிருப்தி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில், "ஒரு புளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா ?. நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து டுவிட்டர் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் டுவிட்டிற்கு, எலான் மஸ்க் தனது பதில் டுவிட்டில், "நாங்களும் கட்டணம் (பில்) செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே டுவிட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்