ஈராக் பிரதமருடன் பிளிங்கன் சந்திப்பு; இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் பற்றி விரிவான ஆலோசனை

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் தெளிவுப்படுத்தினேன் என்று பிளிங்கன் கூறினார்.

Update: 2023-11-06 01:25 GMT

பாக்தாத்,

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல், ஜோர்டான், மேற்கு கரை மற்றும் சைப்ரஸ் நாடுகளில் பயணம் மேற்கொண்டார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற அவர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ஹெர்ஜாக் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்தது.

இதில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான மோதலை தடுப்பதற்கான அவசியம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிளிங்கன், பிரதமருடனான இந்த ஆலோசனை நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையில் இருந்தது என கூறியதுடன், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் தெளிவுப்படுத்தினேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவர் துருக்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்