ஷேக் ஹசீனாவிடம் தொலைபேசியில் பேசியதாக அவாமி லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகி கைது

வங்காள தேசத்தில் தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-14 11:00 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறைகள் வெடித்தன. இதில் மாணவர்கள், போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதை தொடர்ந்து, மாணவர்களின் போராட்டமும், வன்முறையும் ஓய்ந்தது.

இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் மாணவர்கள் மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து வங்காளதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வங்காளதேசம் பர்குனா மாவட்ட அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜஹாங்கிர் கபீர், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக அம்தாலாவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரலான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, வங்காளதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த சதி செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டின் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பர்குனா சதர் காவல் நிலைய அதிகாரி ரஹ்மான் கூறியுள்ளார்.

முகநூலில் பரப்பப்பட்ட மூன்று நிமிட அழைப்பில், ஷேக் ஹசீனா கட்சி நடவடிக்கைகளை ஒழுக்கத்துடன் நடத்துமாறு கபீருக்கு அறிவுறுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த உரையாடலில், கபீர் ஹசீனாவை சமாதானப்படுத்தி உள்ளார். கவலைப்படாதீர்கள், நீங்கள் கவலைப்பட்டால் நாங்கள் பலவீனமாகிவிடுவோம், நாங்கள் வலுவாக இருக்கிறோம் என கூறினார்.

ஷேக் ஹசீனா பதிலில், நான் ஏன் கவலைப்பட வேண்டும், எனக்கு பயமில்லை.  எங்கள் காவல்துறையை ராணுவம் எப்படி தூக்கி அடித்தார்கள் என்று நீங்கள் பார்த்தீர்களா? அவர்கள் பர்தா அணிந்திருந்த எங்கள் தொழிலாளர்களை கடுமையக தாக்கியுள்ளனர். இந்த நாடு இரத்தம் சிந்தியதன் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்